வியாழன், 19 பிப்ரவரி, 2026

மோடி, எப்ஸ்டீன் மற்றும் அந்த ‘நிழல் உலக’ தொடர்புகள்: மறைக்கப்படும் உண்மைகள்!

 ஒரு கருப்பு டைரி… இந்திய பிரதமர் எனும் தனிநபரைக் கடந்து நிற்கும் தேசிய அவமானம்.

(15.2.2026 ஜனசக்தி வார இதழில் சி.ஆர்.செந்தில்வேல் எழுதிய கட்டுரை)

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, இந்திய அரசியலில் ஒரு பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஒரு சர்வதேசக் குற்றவாளியின் ஆவணங்களில் இந்தியப் பிரதமரின் பெயர் இடம்பெற்றிருப்பது, வெறும் அரசியல் சர்ச்சையாக மட்டுமல்லாமல், நாட்டின் கௌரவம் மற்றும் அதிகாரத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதமாகவும் மாறியுள்ளது.

ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் இன்று உலகையே அருவருப்படையச் செய்யும் ஒரு குறியீடாக மாறியுள்ளது. பெரும் கோடீஸ்வரர், நிதி ஆலோசகர் என்ற முகமூடிக்கு பின்னால் அவர் மறைத்து வைத்திருந்த நிழல் உலகம், FBI-ன் அதிரடி விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்தது. 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மட்டும், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மைனர் சிறுமிகளை ஏமாற்றியும் கடத்தியும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

அமெரிக்க கன்னித் தீவுகளில் (U.S. Virgin Islands) அமைந்துள்ள லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் (Little Saint James) என்ற தீவையே எப்ஸ்டீன் விலைக்கு வாங்கினார். சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு ரகசிய இடமாக இருந்தது. இது பின்னாளில் ஊடகங்களால் "பாவங்களின் தீவு" (The Island of Sin) என்றும், "பாலியல் வன்கொடுமைத் தீவு" (Orgy Island) என்றும் அழைக்கப்பட்டது..

உலகின் பல நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட சிறுமிகளை இந்தத் தீவிற்கு அழைத்து வர எப்ஸ்டீன் ஒரு தனி ரகசிய விமானத்தைப் பயன்படுத்தினார். அதற்கு "லாலிடா எக்ஸ்பிரஸ்" என்று பெயர். இந்த விமானத்தில் உலகின் பல முக்கியத் தலைவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் அந்தத் தீவிற்குப் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எப்ஸ்டீனின் விமானப் பயணக் குறிப்பேட்டில் (Flight logs) உள்ளன..

அங்கு கொண்டு வரப்பட்ட சிறுமிகள் தீவை விட்டு வெளியேற முடியாதபடி சிறைவைக்கப்பட்டனர். அவர்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். இவர்களைத் தனது அதிகாரமிக்க நண்பர்களுக்கும் 'பகிர்ந்து' கொண்டு, ஒரு சர்வதேசப் பாலியல் கடத்தல் சாம்ராஜ்யத்தையே அவர் நடத்தி வந்தார்.

பல ஆண்டுகாலப் புகார்களுக்குப் பிறகு, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI 2019-ல் எப்ஸ்டீனை வளைத்துப் பிடித்தது.

அவரது நியூயார்க் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், சிடிக்கள் மற்றும் ஒரு "கருப்பு டைரி" கைப்பற்றப்பட்டது.

அவர் பல உலகத் தலைவர்களைப் பாலியல் ரீதியாகச் சிக்க வைத்து, அவர்களை மிரட்டுவதற்காக ரகசியக் கேமராக்களைப் பயன்படுத்தியது FBI விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் எப்ஸ்டீன் மூலம் பல முக்கிய நபர்களின் பெயர்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10, 2019 அன்று அவர் நியூயார்க் சிறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவர் இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அவரது அறையைக் கண்காணிக்கும் கேமராக்கள் செயலிழந்தது மற்றும் காவலர்கள் உறங்கியது பெரும் சந்தேகங்களை எழுப்பியது.

யார் காப்பற்றப்பட்டார்கள்?: எப்ஸ்டீன் உயிரோடு இருந்தால் உலகின் பல அதிபர்கள், இளவரசர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் பெயர்களைக் கூறிவிடுவார் என்பதால், அவர் 'கொல்லப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகம் இன்றும் சர்வதேச அரசியலில் நிலவுகிறது.

இத்தகைய கொடூரமான குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபர், தனது மின்னஞ்சலில் இந்தியப் பிரதமரின் பெயர் இடம்பெறச் செய்ததுதான் தற்போதைய சர்ச்சைக்குக் காரணம்.

1000 சிறுமிகளைச் சீரழித்த ஒரு கிரிமினல், தனது குறிப்புகளில் ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி எழுதியிருப்பது அந்த நாட்டுக்கே நேர்ந்த அவமானம் என எதிர்க்கட்சிகள் சாடுகின்றனர்.

எப்ஸ்டீன் தனது வழக்கமான 'பிளாக் மெயில்' அல்லது 'பெயர் பயன்பாடு' (Name-dropping) உத்தியை மோடி விஷயத்திலும் பயன்படுத்தினாரா என்பதே இப்போதைய கேள்வி.

வெளியான எப்ஸ்டீனின் மின்னஞ்சல் குறிப்புகளில், 2017-ல் பிரதமர் மோடி மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தை எப்ஸ்டீன் தனது ஆலோசனையின் மூலம் ஒருங்கிணைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாலியல் குற்றவாளி, ஒரு நாட்டின் பிரதமரைத் தனது "ஆலோசனையின் கீழ்" இயங்குபவர் என்று உரிமை கொண்டாடுவது எப்படி?

ஒரு கிரிமினல் கும்பலின் தலைவனுக்கும் இந்திய வெளியுறவுத் துறைக்கும் இடையே மறைமுகத் தொடர்புகள் இருந்ததா?

இத்தகைய சர்வதேசக் கறைபடிந்த ஆவணங்களில் பெயர் வந்த பிறகு, தார்மீக அடிப்படையில் பிரதமர் பதவியில் நீடிப்பது முறையா என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.

வரலாற்றில் இத்தகைய குறிப்புகள் ஏற்படுத்திய அதிர்வுகள்

மின்னஞ்சல் அல்லது டைரி குறிப்புகள் மட்டும் ஒருவரைத் தண்டிக்கப் போதுமானவை அல்ல என்றாலும், அவை ஒரு தலைவரின் பிம்பத்தை உடைக்க வல்லவை என்பதற்கு வரலாறு பல சான்றுகளைக் கொண்டுள்ளது

ஜெயின் ஹவாலா டைரி குறிப்புகளில் இடம்பெற்ற சுருக்க எழுத்துக்களுக்காக எல்.கே. அத்வானி போன்ற பிஜேபி மூத்த தலைவர் தற்காலிகமாகப் பதவிகளைத் துறக்க வேண்டியிருந்தது.

பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவியையே பறித்தது.

இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயர் வந்ததற்காகப் பிரிட்டன் இளவரசர் தனது அரச கௌரவங்களை இழக்க நேரிட்டது.

போஃபரஸ் டைரி குறிப்பும் பிஜேபியின் கடந்த கால அரசியலும்

போஃபர்ஸ் வழக்கில் சுவீடன் நாட்டு போஃபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் அர்ட்போ (Martin Ardbo) என்பவர் ஒரு டைரி வைத்திருந்தார்.

அந்த டைரியில் 'Q' என்ற எழுத்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலனாய்வில் அது ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரான ஒட்டாவியோ குவாத்ரோச்சியைக் (Ottavio Quattrocchi) குறிப்பது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த டைரியில் "R" என்ற எழுத்தும் ஓரிடத்தில் வந்ததாகக் கூறப்பட்டது, அதை ராஜீவ் காந்தியுடன் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால் 'Q' என்பதுதான் அந்த வழக்கில் மிகப்பலமான ஆதாரமாகப் பார்க்கப்பட்டது. இதை அன்றை தினம் பிஜேபி வெறும் டைரி குறிப்பை வைத்து பெரும் அரசியலில் புயலை கிளப்பியது

ஊழல் தொடர்பாக விவாதிக்க அரசு மறுப்பதாகக் கூறி, பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து 1989-ல் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த போராட்டத்தின் விளைவாக 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 1989 தேர்தலில் போஃபர்ஸ் எதிர்ப்பு அலையில் 85 இடங்களைக் கைப்பற்றியது .

அன்று ராஜீவ் காந்திக்கு எதிராக எந்த நேரடி ஆதாரமும் இல்லாதபோதும், ஒரு டைரி குறிப்பில் இருந்த 'Q' (குவாத்ரோச்சி) என்ற எழுத்தையும், குவாத்ரோச்சிக்கும் பிரதமருக்கும் இருந்த நட்பையும் வைத்தே பாஜக "பிரதமர் ஊழல்வாதி" என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தது.

"ஒரு குற்றவாளியின் டைரியில் உங்கள் நண்பர் பெயர் இருந்தால், நீங்களும் குற்றவாளிதான்" என்பது அன்று பாஜக-வின் வாதமாக இருந்தது. இதற்காக 100 எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்து நாடாளுமன்றத்தையே முடக்கியது.

இன்று எப்ஸ்டீன் விவகாரத்தில் பாஜக "ஆதாரம் எங்கே?" ஒரு சர்வதேசக் குற்றவாளியின் (எப்ஸ்டீன்) மின்னஞ்சலில் பிரதமரின் பெயர் வந்திருப்பதை, "இது வெறும் ஒரு குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல்" என்று கூறி பாஜக நிராகரிக்கிறது. "வெறும் பெயர் இருப்பதாலேயே ஒருவரைத் தப்பு சொல்ல முடியாது, நிரூபிக்கப்பட்ட ஆதாரம் வேண்டும்" எப்ஸ்டீனின் 'வாடிக்கையாளர் பட்டியலில்' மோடியின் பெயர் இல்லை அதனால் மோடி சுத்த சுயம்பிரகாசம் என்று இப்போது தற்காப்பு வாதம் செய்கிறது.

குற்றவாளியின் ஆவணங்களில் பெயர் வந்தது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதை தாண்டி இத்தகைய சர்ச்சைகள் அதிகார மையங்களுக்கும் நிழல் உலக மாஃபியாக்களுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பல்ல; அது நிகழ்கால ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணி. போஃபர்ஸ் டைரி குறிப்புகளை வைத்து அன்று அறச்சீற்றம் கொண்டவர்கள், இன்று எப்ஸ்டீன் ஆவணங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "அன்று அது அரசியல் தர்மம், இன்று இது வெறும் அவதூறு" என்ற இரட்டை நிலைப்பாடு ஜனநாயகத்தின் மாண்பைக் கேள்விக்குறியாக்குகிறது.

ஒரு நாட்டின் பிரதமரின் பெயர், சர்வதேசக் குற்றவாளி ஒருவரின் ரகசியத் தொடர்புகளில் இடம்பெறுவது என்பது வெறும் தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல; அது இந்திய இறையாண்மையின் மீதான கறை. மின்னஞ்சல் குறிப்புகள் மட்டுமே ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கப் போதுமானவை அல்ல என்றாலும், அந்தச் சந்தேக மேகங்களை விலக்க வேண்டிய பொறுப்பு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்டு.

அரசியல் பிம்பங்கள் என்பது கண்ணாடியைப் போன்றவை; ஒரு சிறு விரிசல் விழுந்தாலும் அதன் உண்மைத்தன்மை சிதைந்துவிடும். அன்று 'Q' என்ற ஒற்றை எழுத்திற்காக ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு, இன்று 'எப்ஸ்டீன் ஆவணங்களை' எப்படி அணுகப்போகிறது என்பதில்தான் இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி அடங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், விசாரணை என்பது தார்மீக அடிப்படையில் வெளிப்படையாக அமைய வேண்டும். அப்போதுதான் "சத்யமேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்) என்ற நமது நாட்டின் தாரக மந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஜெப்ரி எப்ஸ்டீன் இறந்துவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற ஆவணங்கள் இன்றும் பல அதிகார மையங்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

நாள் 3.2.2026

செல்: 9940817745 கட்டுரையாளர்

                                                                                                     சி.ஆர்.செந்தில்வேல்

                                     ‌‌‍‌‌. சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்

                                                                                                        இராமேஸ்வரம்

. ‌‌. ‌‌ இராமநாதபுரம் மாவட்டம்

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

GST வரி விதிப்பில் இருந்து மீன் உணவு பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சி.ஆர்.செந்தில்வேல்

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்கக் கோரி.

இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் எழுதிய கடிதம்

மாண்புமிகு,

மாண்புமிகு உங்களது தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மீன் உணவுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிப்பு தொடர்ந்திருப்பது குறித்து எங்கள் கோரிக்கையை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி ஈட்டுதல், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு எனப் பல துறைகளில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாகத் தொடங்கிய இத்தொழில் இன்று வணிகரீதியாகவும் தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகவும் திகழ்கிறது.

ஆனால் மீன்பிடி துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது:

அதிகப்படியான மீன்பிடித்தல்

சட்டவிரோத மற்றும் அழிவுக்குரிய தொழில்நுட்பங்கள்

கடல் வாழ்விட அழிவு

சுற்றுச்சூழல் பாதிப்புகள்

அரசு மானியக் குறைப்புகள்

இவற்றால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மேலும் மீன் உணவு என்பது கெட்டுப்போகும் தன்மை கொண்ட பொருள். இதனை நீண்டகாலம் சேமிக்க இயலாததால், சாதாரண பண்டங்களைப் போல் நடத்தி ஜிஎஸ்டி விதிப்பது மீனவர்களுக்கும், நுகர்வோருக்கும் கூடுதல் சுமையாக உள்ளது.

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் .

தற்போது பதப்படுத்தப்பட்ட மீன் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன் வளர்ப்பு சாதனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 5 சதவீத வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வந்து சிறிய ஆறுதலாக இருந்தாலும், தற்போது அமெரிக்காவில் இந்திய மீன் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதிப்பு செய்ததில் மீன் உணவு ஏற்றுமதி கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சீனா ஜப்பான் உள்ளிட்ட கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளை நம்பியே நமது மீன் உணவு ஏற்றுமதி உள்ளது , 

சர்வதேச சந்தையில் ஏற்படும் போட்டி, பல்வேறு நாடுகளின் சுங்கம் மற்றும் வரிவிதிப்பு முறை/ போக்குவரத்து செலவின உயர்வு போன்ற காரணங்களால் மீன் உணவு ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது, தற்போதைய சூழலில் மீன் உணவு ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கி மீன் உணவு ஏற்றுமதியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது,

மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தும் இறுதியில் சாமானிய மீனவன் தலையில் கட்டப்படுகிறது, இந்த சூழ்நிலையை போக்க உள்நாட்டு மீன் உணவு பொருட்கள் நுகர்வை அதிகப்படுத்த வேண்டும், எனவே 

மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் என்பதில் எங்களுக்கு உறுதி உண்டு.

அன்புடன்

சி.ஆர்.செந்தில்வேல்

நாள்: 05.09.2025

C.R.SENTHILVEL

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

கச்சத்தீவு நம் கைவிட்டு போய் 50 ம் ஆண்டில்

 





கச்சத்தீவு; நம் கைவிட்டுப் போய் 50-ம் ஆண்டு தொடக்கம்!

கண்ணீரில் மீனவர்கள்... கண்டுகொள்ளாத அரசுகள்!

(ஜனசக்தி இதழில் சி.ஆர்.செந்தில்வேல் எழுதிய கட்டுரை.)

 ‘கச்சத்தீவு’. தமிழக மீனவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்தத் தீவு நம் கைவிட்டுப் போய் 49 ஆண்டுகள் முடிந்து, ஜூன் 28-ல் ஐம்பதாவது ஆண்டு தொடங்கி விட்டது 

தமிழகத்தின் தென்கோடி எல்லையான ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் இருக்கிறது கச்சத்தீவு. ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகை பகுதியாக இருந்து வந்த இந்தத் தீவை திடீரென இலங்கை தங்களுக்கு சொந்தமான தீவு என உரிமை கொண்டாடத் துவங்கியது. தமிழக மீனவர்கள் பாக்நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு ஓய்வு எடுக்கவும், தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்தவும் உரிய இடமாக விளங்கிய கச்சத்தீவு, இந்திய பிரதமர் இந்திரா காந்தி - இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா ஆகியோர் இடையே ஏற்பட்ட உடன்பாட்டினால் நம் கையை விட்டுப் போனது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி 1974-ம் ஆண்டு ஜூன் 28-ல் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய – இலங்கை அரசுகள் ஒரே நேரத்தில் வெளியிட்டன. 

கச்சத்தீவில் சீனிகுப்பன் என்பவரால் அமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இருக்கிறது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விழாவில் இருநாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பது இன்று வரை தொடர்கிறது. ஆனாலும் அப்போது இல்லாத கட்டுப்பாடுகள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதல்ல என ஏராளமான ஆவணங்கள் ராமநாதபுரம் மன்னர் வசம் இருந்தன. சென்னை சட்டக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பிரிவின் கருத்தையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை வழங்க இந்திரா முடிவெடுத்தார். இதைத் தடுத்து நிறுத்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும் அதற்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. விளைவு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் உடமைகளையும் பறிகொடுத்து வரும் அவலம் தொடர்கிறது.

கடலுக்குச் சென்றால் மீன்பிடித்து விட்டு நிம்மதியாக கரைக்கு திரும்புவோமா என்ற உத்திரவாதம் இல்லாத நிலையிலும், மாற்று தொழிலுக்கான வாய்ப்புகள் இல்லாததால் இலங்கை கடற்படையினரின் இன்னல்களைச் சகித்துக் கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாக் நீரிணை பகுதியில் தமிழகத்தின் 6 மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்தான். அதிலும் குறிப்பாக, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்தான். அதற்குக் காரணம் , ராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பரப்பில் இந்திய கடல் எல்லை பகுதி மிக குறுகியதாக இருப்பதுதான்.

கரையில் இருந்து 3 கடல் மைல் தாண்டி விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றால் அடுத்த 6 கடல் மைல் பரப்பில் பாறைகளே நிறைந்திருக்கும். அதைத் தாண்டி மிச்சம் இருப்பது வெறும் 3 கடல் மைல்கள் மட்டுமே. இந்த 3 கடல் மைல்களுக்குள்ளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளால் மீன்பிடிப்பது என்பது சாத்தியமில்லாததாகி விடுகிறது. எனவேதான் தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த கச்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை அப்போது ஆண்டவர்கள் இதற்கு எதிராக வலுவாகக் குரல் எழுப்பவில்லை என்ற குறைபாடு ஒருபுறம் இருந்தாலும் ஒரு நாட்டின் நிலப்பகுதியை மற்றொரு நாட்டிற்குத் தானம் செய்ய ஒன்றிய அரசுக்கு அன்று ஏற்பட்ட நிர்ப்பந்தம் தான் என்ன? அன்றைய பிரதமர் இந்திரா அம்மையார் இதற்கு வெளிப்படையான எந்தக் காரணத்தையும் கூறாமலே கச்சத்தீவை இலங்கையிடம் கொடுத்துவிட்டார்.

1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. ’பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்’ என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தாகிய போது 1958 -ம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.

கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 UN convention on continental shelf) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையைப் பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்தத்தில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின்பற்றப்படவில்லை. ராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்பதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்தத்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது.

கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம் தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958-ம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி - பண்டாரநாயகா ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்படவில்லை.

50 ஆண்டுகளாக இந்திய - இலங்கை - பன்னாட்டுக் கடல்பகுதியில் தொடரும் மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினையை முன்வைத்து இதுவரை 360 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான இந்தியப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை இலங்கை அரசு மறுத்து வருவதுடன், தொடர்ந்து இத்தீவை தங்களுடைய ராணுவ முகாமாக மாற்றுவதற்கும், சீன ராணுவ தளமாக உருவாக்கி இந்தியாவை மிரட்டுவதற்கும் பயன்படுத்தி வருகிறது. மேலும், இந்திய மீனவர்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பதிலாக புத்த கோயில்களை கட்டுவதன் மூலம் கச்சத்தீவின் மீது நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இது தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் செய்கிற துரோகமாகும்.

மத்தியில் ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே கொள்கை ரீதியில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் மிக மிக தாமதமாகத் தான் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தன. இதில் ஜெயலலிதா, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு ஜவகர்லால் நேரு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட பெருபாரி கிராமத்தை, மீட்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நேருவின் ஒப்பந்தம் செல்வதக்கது அல்ல என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி வழக்குத் தொடுத்தார்.

2021-ல் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இந்தியா அரசுகளின் 23.3.1976 அன்றைய கடிதப் போக்குவரத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டுமென 5.8.2021-ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றங்களில் நடைபெற்ற அத்தனை வழக்கிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆட்சி செய்த அனைத்து ஒன்றிய அரசுகளும் இலங்கைக்கு சாதகமாக கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் என்ற வாதத்தையே பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளார் 


தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது, அல்லது கடிதங்கள் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளைத்தான் செய்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கி வருகிறது. ஆனால், கச்சத்தீவு தொடர்பான வழக்கை தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

மேலும், இது உச்ச நீதிமன்றத்தால் தீர்வு காணும் பிரச்சினை அல்ல. வெளிநாட்டு கொள்கையில் நம்நாட்டு நீதிமன்றங்கள் எந்த அளவு தலையிட முடியும் என்பது நமக்குத் தெரியும். எனவே, இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில், ஒருதலைபட்சமாக கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது செல்லாது என அறிவித்து அதற்கான சர்வதேச சபையை நாடி ராஜ்ய ரீதியில் தீர்வு கண்டு கட்சதீவை மீட்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் மாநிலத்தை ஆளும் கட்சிகளும் செய்வதில்லை. மத்தியில் ஆளும் கட்சிகளும் செய்வதில்லை. இதே நிலை நீடித்தால் நூற்றாண்டு கடந்தாலும் கச்சத்தீவு என்பது நம் மீனவர்களின் கண்ணீர் தீவாகத்தான் இருக்கும்”

         கட்டுரையாளர்

        சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

தமிழ்நாடு AITUC

மீனவத் தொழிளார் சங்கம்.

இராமேஸ்வரம்

செல்: 

9940817745


             



வெள்ளி, 30 ஜூலை, 2021

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 - சி.ஆர்.செந்தில்வேல்

 இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021

- சி.ஆர்.செந்தில்வேல் 


மத்திய அரசு கடந்த 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 

இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவை கொண்டுவந்தது.    

இந்திய நாடு முழுவதும் உள்ள மீனவர்களும் அரசியல் இயக்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைவிட்டது. 

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம், 2021 என்ற பெயரில் இச்சட்டத்தை மீண்டும் மூன்றாவது முறையாக கொண்டு வருகிறது .

 இந்த சட்டம் இந்திய மீனவர்களின் நலனை முன்னிறுத்தியோ"

இந்திய கடல் வளத்தை மேலாண்மை செய்தல் பற்றிய அக்கறையாலோ, கொண்டுவரப்படவில்லை,மாறாக

1982 ல் சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட கடல் எல்லை குறித்த ஒப்பந்த்திற்கு பின் இந்தியாவிற்கு 2.02 பில்லியன் சதுர கிலோமீட்டர் கடல்பரப்பு கொண்ட பிரத்தியோக பொருளாதார மண்டல கடல் பகுதி EEZ ( Exclusive economic zone)உருவானது,

இந்திய கடல் மண்டலப் (EEZ) பகுதியில் எவ்வாறு மீன்பிடித் தொழில் செய்ய வேண்டும், எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகை மீன்களை பிடிக்க வேண்டும்,

எந்த வகை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும், என்கிற வரையறைகளை சர்வதேச நாடுகளின் அமைப்பாக இருக்க கூடிய FAO என்று அழைக்க கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புதான் தீர்மானிக்கிறது,

FAOவில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடி 1995ல் ரோமில் உருவாக்கிய பொறுப்பார்ந்த மீன்பிடிப்பிற்கான சர்வதேச நடத்தை விதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டது.

2001 ஆம் ஆண்டின் தோஹா சுற்று முதல் உலக வர்த்தக அமைப்பில் மீன்வள மானியங்கள் குறித்த முடிவுகளும், இந்தியாவின் மீன்பிடி கொள்கையை சர்வதேச கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

இதன் தொடர்ச்சியாக

இந்தியா தனது மீன்பிடி கொள்கையை சர்வதேச நாடுகளுடன் செய்துகொண்ட மீன்பிடி ஒப்பந்தங்களில் அடிப்படையில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு தனது தேசிய கடல் மீன்பிடி கொள்கையை உருவாக்கிய கொள்கிறது,

இதன் பின்னணியில் 

உலக மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்தும் 

 உடன்படிக்கை குறித்து விவாதிக்க WTO உறுப்பு நாடுகளின் அனைத்து வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் கடந்த 2021 ஜூலை 15 அன்று கூட்டியது. 104 நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் கலந்து கொண்டார் இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்பட்ட. அம்சம், உலக கடல் வளத்தில் 60% மீன்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், அதை முறை படுத்துவதற்கு உலகளாவிய மீன்பிடித் தொழிலுக்கு புதிய விதிகளை அமைக்க வேண்டும், குறிப்பாக வளரும் நாடுகள் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு கொடுக்கும் மீன்பிடித் தொழிலுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், என நிர்பந்தம் கொடுத்தது, மேலும் 

மீன்வள மானியங்கள் தொடர்பான உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகள் 2001 ஆம் ஆண்டில் தோஹாவில் தொடங்கப்பட்டன, அதன் தொடர்ச்சியாக 12 வது அமைச்சர்கள் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2021 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறும்.   

அதற்கு முன்பாக இந்திய தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு வழங்குகின்ற மானியங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். அத்துடன் கடுமையான சட்டங்கள் மூலம் கடலில் மீன் அறுவடை செய்யும் முறையை குறைக்கவேண்டும், அதற்கு மாற்றாக கடலில் மீன் வளர்க்கும் (MARICULTURE - முறையை ஊக்கப்படுத்த வேண்டும் , இந்த பின்புலத்தில்தான் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முனைப்பு காட்டுகிறது  

ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்த நாடுகள் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மீன்வள மானியங்களை அவர்கள் நாட்டு மீனவர்களுக்கு வழங்குகின்றன, அவற்றில் இரண்டில் ஒரு பங்கு ஆலை கப்பல் வைத்திருக்கும் வணிக மீனவர்களுக்கு செல்கிறது, 

இந்தியாவில் ஆண்டுக்கு 770 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது, 

அதிலும் 50% மானியம்,  

ஆலை கப்பல் வைத்திருக்கிற முதலாளிகளுக்கு சென்று சேர்கிறது, 

உலகில் உள்ள கடல் வளத்தில் ஆண்டுக்கு 70 சதவீதத்தை மிகப்பெரிய ஆலை கப்பல்கள் சுரண்டுகின்றன, வெறும் 30% மீன்களை மட்டும் தான் உலகத்தில் இருக்கக்கூடிய பலகோடி பாரம்பரிய மீனவர்கள் பிடிக்கின்றனர்,

WTO விவாதப் பொருளாக இருக்கின்ற (IUU) Illegal, Unreported and Unregulated fishing 

 சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல்,

என்கிற என்கிற பிரச்சனையும் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும், யார் மீது பாய வேண்டும் என்று சொன்னாள், 

அதி நவீன வசதிகளைக் கொண்டிருக்கக்கூடிய உலகம் முழுவதும் உள்ள பகாசுர மீன்பிடி கப்பல்கள் மீது பாய வேண்டும்,   

இந்திய அரசு தற்போது கொண்டு வருகிற சட்டமானது.. பகாசுர மீன் பிடிக்கப் கப்பலையும் சாதாரண கட்டு மரத்தையும் , 

ஒரே அளவுகோலில் பார்க்கிற சட்டமாக உள்ளது,  

WTO நடத்திய சர்வதேச அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய நமது தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள், வளர்ந்த நாடுகள் அவர்களது நாட்டு மீன்பிடி தொழிலுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்தாமல், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது நிர்பந்தம் கொடுப்பதை சுட்டிக்காட்டி பேசினார், அவரது பேச்சு வளரும் நாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றது, ஆனாலும் நமது அமைச்சரின் பேச்சுக்கும் அவரது செயலுக்கும் வேறுபாடு அதிகம், இறுதியில் WTO நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து போவதற்கு இந்தியாவில் ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற இந்த சட்டம் ஒன்றே சாட்சி போதும் ,

இந்தியாவில் நாட்டுப் படகுகள் விசைப் படகுகள் என இரண்டு லட்சம் படகுகளும்,

2 கோடி மீனவர்கள் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களின் எதிகாலம் பற்றி பேசுவதைவிட கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீனை பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன்வளர்ப்பது, அதற்காக கடல்பரப்பில் பிளாட் போட்டு தனியாருக்கு கொடுப்பது, போன்ற விசயங்களைதான் தேசிய கொள்கை , அதிகம் பேசுகிறது,

தற்போது மத்திய அரசு கொண்டு வரும் சட்டம்,

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 கடல் மைல் கொண்ட

பிராந்திய பகுதி கடல் நீருக்கு அப்பால் உள்ள 200 கடல் மைல் தூரம் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டல EEZ ( Exclusive economic zone)

பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக விதி முறைகளை வகுக்க இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கடலோர மாநில அரசுகளும் தங்களது பிராந்திய கடல் பகுதிகளை நிர்வாகம் செய்ய தங்களுக்கென்று மாநில அளவிலான சட்டங்களை இயற்றி நிர்வகித்து வருகிறது, தமிழகத்திலும், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983, நடைமுறையில் உள்ளது,

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மீனவர்கள் இதுபோன்ற மாநில அரசுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு தங்களது மீன்பிடித் தொழிலை பிராந்திய கடல் பகுதி மட்டுமல்லாமல் இந்தியாவினுடைய பொருளாதார மண்டலங்களை (EEZ) நோக்கியும் அதனை தாண்டி சர்வதேச கடல் எல்லை வரை சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்,

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தற்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால்,

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்..!

அதனுடைய சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சிறு மீனவர்கள் 12 கடல் மைல் தூரம் கொண்ட பிராந்திய கடல் எல்லையை தாண்ட கூடாதென வலியுறுத்துகிறது.

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்க வேண்டுமென்று சொன்னால் மத்திய அரசு அறிவிக்கும் கடல்வள மேலாண்மை திட்டங்களுக்கு உட்பட்டும், சர்வதேச மீன்பிடி கொள்கைகளுக்கு உட்பட்டும், மீன் பிடிக்க வேண்டும்..! இல்லை என்றால் அனுமதி இல்லை..!


 மீன்பிடி தொழிலை பொருத்தவரைக்கும் விவசாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தொழில் நாட்டினுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிற ஒரு தொழில், இந்த தொழிலுக்கு உலக நாடுகள் முழுவதும் மானியங்கள் கொடுத்து ஊக்குவித்து, கொண்டிருக்கும்போது இந்திய அரசு மீன்பிடி தொழிலுக்கும் பிடிக்கின்ற மீனுக்கும், கட்டணம் நிர்ணயிப்பது ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும், ஏற்படுத்துகிறது, ஏற்கனவே மத்திய அரசின் GST,வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் மேலும் அழிவை நோக்கி போகும் என்பதில் ஆச்சரியமில்லை"

மேலும் பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்கக் கூடிய படகுகளின் தரம் அளவு போன்றவை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது குறிப்பாக இந்திய வாணிப கப்பல் சட்டம் 1958 கீழ் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும்..!

அனுமதி இல்லாமல் மீன் பிடித்தாலோ அல்லது மத்திய அரசு கொண்டு வரும் மீன் வள மேலாண்மை திட்டங்களை மீறினாலோ மீனவர்களுக்கு அபதாரம் மற்றும் தண்டனை கொடுப்பது என்று இச்சட்டம் கூறுகிறது,


மீன்பிடி தொழிலின் போது படகுகளை சோதனை செய்கிற அதிகாரத்தை மீன்வளத் துறையிலிந்து இந்திய கடலோர காவல் படைக்கு இச்சட்டம் அதிகாரத்தை கைமாற்றி கொடுக்கிறது..! அதாவது சிவில் நிர்வாகத்திடம் இருந்து ராணுவத்திற்கு அதிகாரம் கை மாற்றப்படுகிறது, 

கூடுதலாக இச்சட்டத்தை அமலாக்கம் செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என மசோதா பரிந்துரைக்கிறது,

சோதனையிட வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இந்திய மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் வெளிநாட்டு மீனவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் விதிக்கலாம் என்கிற சரத்தும் இச்சட்டத்தில் உள்ளது ,

உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க

'தண்டனை', 'அபராதம்', 'கைது', 'பறிமுதல்' என மீனவ மக்களை அச்சுறுத்தக்கூடிய வார்த்தைகள் தான் மேற்படி சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மக்களுக்கு நன்மை புரிவதற்காக சட்டம் இயற்றப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மக்களை துன்புறுத்துவதற்காகவே சட்டம் இயற்றப்படும் என்பதை மத்திய அரசு தனது இச்சட்டம் மூலம் நிரூபித்து இருக்கிறது.


இந்திய எல்லையில் அனுமதிபெற்று மீன்பிடிக்கும் பன்னாட்டு கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்று தனி சட்டம் உள்ளது, அச்சட்டத்தின் பெயர் இந்திய கடல் மண்டலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடித்தலை ஒழுங்கமைப்பு செய்யும் சட்டம் 1981, தற்போது அச்சட்டம் ரத்து செய்யப்பட்டு மத்திய அரசு இப்போது கொண்டு வருகிற இந்த சட்டத்தின் மூலமே வெளிநாட்டு கப்பல்களை ஒழுங்கு படுத்த வழிவகை செய்கிறது,

LOP (Letter of Permission) மூலம் பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதை போக்கி ஒற்றை சாரள (single window system) முறையிலான வசதியை செய்து

எந்த விதத் தங்கு தடையுமின்றி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இந்திய நாட்டு எல்லைக்குள் வந்து இந்திய மீன்வளத்தை கொள்ளையிட இந்திய அரசின் பல்வேறு கொள்கைகள் வழி வகுக்கிறது, அதில் எவ்வித மாற்றமும் செய்ய முன்வராத நமது மத்திய அரசு,இந்திய மீனவர்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து பாரம்பரிய மீனவர்களை அழிவு நிலைக்கு கொண்டு செல்கிறது,

மொத்தத்தில்

வெளிநாட்டினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மீன் தேவையைக் கருத்தில் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கு இணங்க இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதே நிதர்சன உன்மை ,


தோழமையுடன்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

9940817745

தமிழ்நாடு AITUC மீனவத்தொழிலாளர் சங்கம்,

இராமேஸ்வரம்.  




 


 

வெள்ளி, 18 ஜூன், 2021

மீன்பிடி தொழிலில் பின்னடைவை சந்திக்கும் தமிழம்

 மீன்பிடி தொழிலில்

பின்னடைவை சந்திக்கும் தமிழம்


தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதிமுக்கிய தொழில்களில் மீன் பிடித் தொழிலும் ஒன்று. 11 லட்சத்திற்கும் அதிகமான மீனவ மக்கள், உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் என பலலட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை அளித்தும் பெரும்பான்மை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கியும், குறிப்பிடத்தக்க வருவாயினை குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டியும், மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கையில் மீன்பிடித் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது.இத்தொழிலை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், கடந்த 50 ஆண்டுகளாக எந்த முயற்சியையும் அரசுகள் எடுக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தை ஆட்சிசெய்த திமுக,அதிமுக அரசுகள் மீனவர்களை கண்டுகொள்ளவில்லை.ஒட்டுமொத்த இந்திய கடற்கரையான 7516 கி.மீட்டர் நீளத்தில் 1076 கி.மீட்டர் நீளமுடைய நாட்டிலேயே இரண்டாவது கடல் வளத்தை கொண்டிருக்கக்கூடிய தமிழக மீன்பிடித்தொழில், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகளின் மோசமான கொள்கை, ஊழல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய நாட்டிலேயே முன்னணியில் இருந்த தமிழக மீன்பிடிப்பு தற்போது அதன் முன்னணி வரிசையை இழந்து 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.


மீன்பிடியில் தமிழகம் பின்னுக்கு போகமுக்கியக் காரணம் மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 50 ஆண்டுகளாக அரசுகள் நிறைவேற்றவில்லை. மிக நீண்ட கடற்கரையை கொண்ட தமிழகத்தில் பெரிய துறைமுகம் என்றால் சென்னை, தூத்துக்குடி, சின்னமுட்டம் ஆகிய துறைமுகங்கள் மட்டுமே.நடுத்தர மீன்பிடித் துறைமுகம் நான்கும் இதர மீன் இறங்குதளங்கள் 300ம் உள்ளன. ஆனால் இவைகளில் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் எதுவுமில்லை. இயற்கை சீற்றக் காலங்களில் மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வசதிகள் இல்லை. இதனால் தமிழகத்தை விட பாதியளவு கடற்கரை நீளம் கொண்ட கேரள மாநிலம் மீன்பிடிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் வளர்ச்சி பெற்றது. தேர்தல் நேரத்தில் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சிகள், மீனவர்களின் வாக்குவங்கியை கவர பல்வேறு வாக்குறுதியை வழங்கின. ஆனால், அவை இன்று வரை கடலில் கரைத்த பெருங்காயமாகவே கரைந்துபோனது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தொடரும் இலங்கை கடற்படை தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை காக்க தவறினார்கள். தற்போது மத்தியில் மோடி அரசுபதவியேற்றபின் மேலும் இவை தீவிரமடைந்துள்ளது. ஆனால் தற்போதைய முதல்வரும் முன்னாள் முதல்வரும் கடிதம் எழுதுவதிலும் மீனவர் பிரச்சனை முன்னுக்கு வரும் போது கட்சத்தீவை மீட்பேன் என வாய்ச்சவடால் விடுவதுமே தொடருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை துவக்குவது, இலங்கை- இந்திய கடற்பரப்பில் குறிப்பாக பாக்.ஜலசந்தியின் மீன்பிடிப்பை ஒழுங்கமைப்பது மாற்றுத் தொழிலான ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான ஆக்கப்பூர்வமான திட்டமிடல் ஆகியவற்றை தமிழக அரசுகள் செய்யத் தவறின.


மீன்வளம் 

 

 தமிழக கடல் வளத்தைப் பாதுகாப்பதில் தொடர்ந்து தமிழகஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. கடலோர நகரங்களில் குப்பைக் கழிவுகள், சாக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் தங்குதடையின்றி கலக்குகின்றன. ஆறுகள் அனைத்தும் ரசாயனமயமாகி போயின. கடற்கரையோரத்தில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலை கழிவுகள்கடலில் கலக்கின்றன. தாதுமணல் கொள்ளையால் கடற்கரை நிலமும், வளமும் சூறையாடப்பட்டது. கடலுக்குள்ளும் இரட்டை மடி, சுருக்குமடி வெடிவைத்து மீன் பிடித்தல் போன்ற தங்கு தடையற்ற மீன்பிடிப்பு தொடர்கிறது. மேலும், இந்திய எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட அந்நியக் கப்பல்கள் வருகையால் ஆழ்கடலிலிருந்து கரை நோக்கி வரும் மீன்வளம் சுரண்டப்படுகிறது. அந்நியக் கப்பல்களை அனுமதிக்க மத்திய அரசை திமுக, அதிமுக அரசுகள் எதிர்க்கும் திறனற்று அவர்களின் பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தும் ஆட்சியாளர்களாக மாறிப் போனார்கள்.

அட்டை, சங்கு மீதான தடை

 

கன்னியாகுமரி முதல் நாகை மாவட்டம் வரை அட்டை, சங்குகுளி தொழிலாளர் பல லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடல் அட்டை மற்றும் சில சங்கு வகைக்கு தடை விதித்தார். அந்தத் தடையை நீக்க வலியுறுத்தி மீனவர்கள் நீண்ட போராட்டம் நடத்தியும் திமுகவின் மத்திய அமைச்சர்கள் தடையை நீக்கவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அட்டை,சங்கு மீதான தடையை நீக்க பாடுபடுவேன் என ஜெயலலிதா சூளுரைத்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காகஒருமுறை கூட மத்திய அரசை வலியுறுத்தவில்லை. மாறாக, மாநில காவல்துறையும், மாநில வனத்துறையும் கடல் அட்டை பிடித்ததாக ஏராளமான மீனவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளின. மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும்மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றும் ஜி.ஆர்.இசட் போன்ற சட்டங்களை இரண்டு அரசுகளுமே தமிழகத்தில் அமல்படுத்தியது. வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு சர்வதேச விலையில் வரியில்லா எரிபொருள் வழங்குவதுபோல் நமது மீனவர்களுக்கும் டீசல்-மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருளை வரி நீக்கம் செய்து தேவையான அளவுகொடுக்க வேண்டுமென கோரும், மீனவர்களின் கோரிக்கையை இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுமே கண்டுகொள்ளவில்லை. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படைந்து கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டருடன் கூடிய மீட்புக்குழு அமைக்கத் தவறினார்கள். வெளிநாடு சென்று பிழைக்கப் போகும் மீனவர்கள் துயரடையும் போது அவர்களை மீட்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உள்நாட்டு மீனவர்-விற்பனையாளர்கள்

 

தமிழகத்தில் ஐந்தரை லட்சம்ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு மீன்பிடிப்பில் 90 சதவீதம் அரசின் பொது நீர்நிலைகள் ஆகும். இவற்றிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் 2.40 லட்சம் டன் மீன்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம்பேர் இத்தொழிலை நம்பியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு பொது நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவக் கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து பறித்து யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மீனவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர் ஆனால் அரசு செவி சாய்க்காமல், குளம், குட்டை, ஏரிகளை பணம் படைத்தவர்களுக்கு தாரை வார்த்தது அதிமுக அரசு.மேலும் 2016ஆம் ஆண்டு திருத்த சட்ட மசோதா என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து ராட்சச விசைப்படகுகளுக்கு சலுகையும் பாரம்பரிய மீனவர்களுக்கு உரிமைப் பறிப்பையும் செய்தது அதிமுக அரசு. மேலும் தமிழக மீன் வளத்துறை நிர்வாகம் அதன்மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரைஊழலில் புரையோடிப்போய் உள்ளது.இத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சிக்காலத்தில் சீரழிக்கப்பட்டது. தற்போது கூட தமிழக மீன்துறை அமைச்சரின் மீது பல்வேறு ஊழல் புகார் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கூட்டுறவு சங்கங்கள், மீனவர் நலவாரியம் என அனைத்தும் பெயரளவிலேயே உள்ளன. மீனவர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு உகந்த திட்டமிடலை முறையாகச் செய்யவில்லை. மீனவர்களின் உயிர்க் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவ உதவி, மீனவ குழந்தைகளின் கல்வி,பேறுகால உதவி, திருமண உதவி, முதியோர் உதவி என பல்வேறு உதவிக்கான அறிவிப்பு மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

1413மீனவக் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 7 லட்சத்து 4 ஆயிரத்து 111 உறுப்பினர்களுக்கு கடந்தாண்டு மட்டும் நலவாரிய பயன்கள் வெறும் ரூ. 3.28 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் உள்ள மீன்விற்பனையாளர்களுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகளும் சமூக நலத்திட்டங்களும் வேண்டுமென கோரிக்கைவைத்து அவை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. 


சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளார்

AITUC மீனவத் தொழிலாளார் சங்கம

இராமேஸ்வரம்

தொ


டர்புக்கு 9940817745


திங்கள், 7 ஜூன், 2021

தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

 தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

(சி.ஆர்.செந்தில்வேல்)


“ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

படகோட்டி திரைப்படத்தில் வரும் மேற்கண்ட பாடல் வரிகள் மீனவர்களின் தேசிய கீதமாக இன்றும் உலா வருகிறது என்றால், அது மிகையில்லை. சமூகத்தில் உள்ள உடலுழைப்பு அனைத்துமே கடினமென்றாலும் ஆழ் கடல் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளிக்கோ அதைவிட பலநூறு மடங்கு அதிகம்.


இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, மீன் பிடி உபகரணங்களின் விலையேற்றம், பிடித்த மீனுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமை, என காலம் முழுவதும் மீனவன் சந்திக்கும் துயரங்களுடன்.. தமிழக மீனவன் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை இலங்கை கடற்படையின் தாக்குதல். 1983ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் ஊனப்படுத்தப்பட்டனர். 

தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்த 13 ஆண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். 

இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. 


பிரச்சனையின் மையம்..


இலங்கையை ஒட்டியுள்ள, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியில் தான் தமிழகத்தின் 80 சதவீதம் மீன் பிடிப்பு உள்ளது. இந்த இரண்டு கடல் பரப்பும் மிகவும் குறுகிய எல்லைகொண் டது. தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர் களும் இரு கடல் பிராந்தியத்திலும் மீன் பிடித்து வந்தனர். இந்த பாரம்பரிய வழக் கத்தை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நமது மீனவர்களுக்கு உத்தரவாதப் படுத்துவதன் மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.


முன்நெடுங்காலத்தில் படகுகளில் பாய்மரம் கட்டி காற்றின் விசையில், கரை யிலிருந்து கடலுக்குள், ஐந்து கடல் மைல் களுக்கு உட்புறமாகவே மீன்பிடித்தனர். தற்போது நமது கடல் பகுதியின் கடல் வளம் குறைய, குறைய, நமது மீனவர்கள் எந்திரம் பொருத்திய படகுகளில் மீன் களை தேடி 30, 40 கடல் மைல் தூரம் பய ணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிலநேரம் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர்.

உள்நாட்டுச் சந்தையின் தேவைக்காக பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்ட நமது மீன்பிடிப்பு முறை, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு நடைமுறைப்படுத்திய பின், அந்நியச் செலாவணி கையிருப்புத்தேவைக்காக நமது மீன்பிடிப்பு முறை, உள்நாட்டுச் சந்தையின் தேவையைப் புறக்கணித்து விட்டு, ஏற்றுமதிக்கான மீன் உற்பத்தி முறையை நோக்கி இந்திய அரசு வளர்க்க துவங்கியது.

பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழித்து முட்டை எடுத்த கதையாக, ஏற்றுமதித் தேவைக்கான மீன்களான, இறால் கனவாய், நண்டு, சிங்கி போன்ற மீன் இனங்களை அதிகமாக பிடிக்க, அதற்குரிய மீன்பிடி தொழில் நுட்பங்களை நார்வே போன்ற நாடுகளின் உதவியுடன் நமது மீனவர்களுக்கு கற்றுக்கொடுத்தது.


இன்று உலகத்தின் பெரும்பகுதி நாடுகள், நார்வே உட்பட அந்த தொழில்நுட்பம் அபாயகரமானது என கைவிட்டுவிட்டன. இந்திய அரசு மட்டும் ஏற்றுமதி நிறுவனங் களின் தேவைக்காக அந்தத் தொழில் நுட்பங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதில் ஒரு வகைத் தொழில் நுட்பம்தான் கொல்லிமடி என்கிற ராட்சஷ இழுவலை. இந்த வலைகளை சாதாரண சிறு ஏழை மீனவன் பயன்படுத்த முடியாது. இரண்டு நவீன விசைப்படகுகள் கொண்டு இந்த வலை வைத்து மீன்பிடிக்கும் முறைக்கு மூலதனமாக ரூ.40 முதல் 50 லட்சம் வரை தேவைப்படும். இந்த வலை தொழில் நுட்பத்தை தடை செய்யக்கோரி சிறு ஏழை மீனவர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தினர். அவர்கள், உச்சநீதிமன்றம் வரை அணுகி இறுதியில் இந்த வலைக்கு 1996ஆம் ஆண்டு நிரந்தர தடை உத்தரவு பெற்றனர்.


தடையை அமல்படுத்தக்கோரி மீனவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும் தடையுத்தரவு 1996 முதல் இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. தடை உத்தரவை இன்று வரை அரசு அமல் படுத்தவில்லை.


இந்த வசதி படைத்தவர்களிடம், மீன் துறை நிர்வாகம், பல லட்ச ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட இந்த வலைகளை சிறு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி பயன்படுத்த அனுமதிக்கிறது. இவர்கள் தினசரி டன் கணக்கில் மீன்கள் பிடிப்பதன் மூலம், சிறு மீனவர்கள் பிடித்து வந்த மீன் வளம், கட்டுப்பாடின்றி சீரழிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதி பாரம்பரிய சிறு மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளையில், இன்னொரு புறத்தில் இலங்கையில் தமிழ் மீனவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு விதித்த கடுமையான கட்டுப் பாடுகள் காரணமாகவும், உள்நாட்டு யுத்தத்தின் பொருட்டு, வெளிநாடுகளுக்கும், உள்நாட்டுக்குள்ளும் அகதிகளாக இடம் பெயர்ந்ததன் காரணமாகவும், அவர்களது மீன்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தபின், இலங்கை தமிழ் மீனவர்கள் பழையபடி சுதந்திரமாக தங்களது மீன்பிடிப்பைத் துவக்கியுள்ளனர். அவர்களது மீன்பிடிப்பு முறை வளர்ச்சி அடையாமல், இந்திய மீன்பிடிப்பு முறையை விட ஐம்பது வருடம் பின்தங்கியுள்ளது.




தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்க இந்திய அரசு அனுமதித்ததன் மூலமும் இந்திய-இலங்கை கடல் பிராந்தியங்களில் இருநாட்டு அரசுகளும் அந்நிய மீன்பிடிக் கப்பல்களுக்கு, தங்குதடையற்ற மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதன் மூலமும், மீன்பிடித் தொழிலில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து இரு நாட்டு மீனவர்களும் மீன்களைத் தேடி எல்லை தாண்ட வேண்டிய சூழல் ஏற்படுவதுடன் இருநாட்டு மீனவர்களிடையே முரண்பாடாக மோதலுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.


மாற்று திட்டமும், மோடி 

அரசின் வாய்ஜாலமும்,

இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சினைகளில் துன்பப்படும் பாக் ஜலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016-ல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017-ல் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்தத் திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50 %ரூபாய் பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20 % ரூபாய் மாநில அரசு மானியமாகவும், 20 % ரூபாய் வங்கிக் கடனாகவும், 10 % ரூபாய் மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும், திட்டத்தின் படி முதல் கட்டமாக பாக் ஜலசந்தியில் உள்ள விசைப் படகுகள் வருடத்திற்கு 500 வீதம் நான்கு வருடத்திற்கு 2000 விசைப் படகுகள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டாக் கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.


ஏனெனில் விலைவாசி ஏற்றத்தின் நிமித்தம் அரசின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இன்றைய மதிப்பு ரூபாய் 1 கோடியே 10 லட்சத்தைத் தொடுகிறது, அரசு இது சம்பந்தமாக மீனவர்களையும், படகுகள் கட்டும் நிறுவனங்களையும் அழைத்து 27 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த நிலையான தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட 18 நிறுவனங்களும் அரசு கொடுத்துள்ள 80 லட்சம் திட்ட மதிப்பில் படகினை செய்ய முடியாது என கைவிரித்த நிலையில், எப்படியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மிகவும் ஆர்வமுள்ள பணபலம் உள்ள சிலரை அழைத்துப் பேசி அதிகாரிகள் சம்மதிக்க வைத்துள்ளார்கள்.


இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்த பட்சம் 5 டன் வலைகளாவது இருக்கவேண்டும். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் மற்றும் சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும். ஆக மொத்தம் மேற்கொண்டு ரூ.30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். மொத்தத்தில் மீனவர் பங்களிப்பாக இந்தத் திட்டத்தில் வங்கிக் கடனாக ரூ.16 லட்சமும், திட்ட பங்களிப்பாக ரூ.8 லட்சமும், உபரி பங்களிப்பாக ரூ.30 லட்சமும் ஆக மொத்தம் 54 லட்சம் மீனவர்கள் முதலீடு செய்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.


இலங்கை கடற்படையால் தனது படகினையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்க்கும் பாரம்பரிய மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது.


எனவே இந்தத் திட்ட மதிப்பினை ரூ.1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது முன்பு இந்திய-நார்வே திட்டத்தின் கீழ் அரசாங்கமே படகுகள் கட்டி பாரம்பரிய மீனவர்களுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிபெறும் என அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.


ஆனால் இதற்கு மாறாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்றால், இந்தத் திட்டத்தை பிற இடங்களில் உள்ள வணிக ரீதியான மீனவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்று அதிகாரிகள் பாக் ஜலசந்தி பாரம்பரிய மீனவர்களை நெருக்குகிறார்கள். ஏற்கெனவே இறால் பண்ணைகள், மீனவர்களுக்கான மாற்றுமுறை மீன்பிடிப்பு முறை என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்.


அதுபோன்றே தற்போது பாரம்பரிய மீனவர்கள் செயல்படுத்த முடியாதவாறு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்து விட்டு, அதை மீனவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்று கூறி பாரம்பரிய மீனவர் அல்லாத பெருமுதலாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கொடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.


மத்திய அரசின் கொள்கை முடிவின் படி பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையால் துன்பப்படும் பாரம்பரிய மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடி வழிமுறை ஏற்ப்படுத்தவும், பாக் ஜலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளைக் குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவர்களைத் தவிர்த்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது.


எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை ரூ.1 கோடியே 10 லட்சமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தனது ராஜாங்க ரீதியான நிர்ப்பந்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வலியுறுத்தியும், கச்சத்தீவையொட்டியுள்ள இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை பெற்றுத்தரக்கோரியும், இந்திய அரசு கடைப்பிடிக்கும் உலகமயம், தாராளமயம் போன்ற உழைக்கும் மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாக, இந்திய கடல் பிராந்தியத்தில் அனுமதிக்கப்பட்ட அந்நிய மீன்பிடிக் கப்பலுக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஏற்றுமதியை நோக்கிய மீன் உற்பத் திக்காக இந்திய அரசால் வளர்த்து விடப் பட்ட, நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட கொல்லிமடி போன்ற வலைகளை முற்றிலுமாக தடுக்கக்கோரியும், மீனவர் கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சனைக்கு இறுதித்தீர்வு கிடைக்கும்.


 கட்டுரையாளர்

சி.ஆர்.செந்தில்வேல்

மாநில செயலாளர்

தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம்

இராமேஸ்வரம்


தொலைபேசி 9940817745