இலுமினாட்டிகள் எனும் முகமூடிக்கு பின்னால்.
--சி.ஆர்.செந்தில்வேல்
-------------------------------------
சமீப ஆண்டுகளாக இலுமினாட்டிகள் என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவலாக வலம் வருகிறது,
இதனை இலுமினாட்டி எதிர்பாளர்கள் என்று சிலர் இப்பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்,
உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் தீமைகளுக்கும் இலுமினாட்டிகளே காரணமென்றும் ,
இந்தியாவிலும் இலுமினாட்டிகளின் ஏஜெண்டுகளால் அரசியல் பொருளாதார
மற்றும் சமுக விஷயங்களில் பல தீங்குகளை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர், அவர்களின் அடையாள எண் 13 என்றும் அதனை குறிக்கும்விதமாக, வங்கி, நூகர்பொருள், அணுசக்தி, மருத்துவம், பெட்ரோலியம், ஆயுதங்கள், ஊடகங்கள், மத அமைப்புகள், அரசியல், நில அமைப்புகள், உணவு, உள்ளிட்ட உலகின் பதிமூன்று துறைகளில் ஏகபோகம் செலுத்தும்,
ஜான்ஜேக்கப் ஏஸ்டர், ஃபன்டி , ஹோலின்ஸ், டூபாண்ட், ஃபிரிமேன் , கென்னடி, லீ குடும்பம், ஒனான்ஸிஸ், ரெனால்ட்ஸ் , ராக்பெல்லர், ராத்ஸ்சைல்டு, ரூசெல், வேன்டியூன், மேற்கண்ட பதிமூன்று பணக்காரர்களே இலுமினாட்டி என்று கூறப்படுகிறது.
இலுமினாட்டிகள் நேரடியாக அமர்ந்து பேசி கொள்வதில்லையாம் ,
இவர்கள் உலகத்தை திரைமறைவில் இயக்குகிறார்கள் எனவும், அவர்கள் செய்ய போகும் செயல்கள் அனைத்தும் முன்கூட்டியே ரகசியமாக அறிவிப்பார்கள் எனவும், அவர்களின் அறிவிப்பு சினிமாக்களில் குறியீடாக வருமாம், அல்லது வேறு வடிவில் குறியீடாக வருமாம் . குறிப்பாக அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு முன்கூட்டியே புகழ் பெற்ற காமிக்ஸ் நாவலில் வந்து விட்டதாகவும், இரட்டை கோபுரம் தகர்ப்பை இலுமினாட்டிகளே செய்தார்கள் எனவும் கூறுகிறார்கள். அமெரிக்க டாலரில் உள்ள ஒற்றை கண் கொண்ட முக்கோணம்தான் இல்லுமினாட்டிகளின் சின்னம் எனவும், இதன் மூலம், இந்த உலகில் அனைத்தும் எங்களால் கண்காணிக்கப்படுகிறது என்பதே இதன் அர்த்தம் என கூறுகிறார்கள்.
மேலும் தங்கள் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ள பில்லி சூனியம் நரபலி . போன்றவற்றை கூட இலுமினாட்டிகள்
பயன்படுத்துகின்றனர் என்று கூடுதல் பீதியை கிளப்புகிறார்கள் தமிழ் நாட்டு இலுமினாட்டி எதிர்பாளர்கள்.
இலுமினாட்டிகள் தங்களது காரியங்களை செய்து முடிக்க உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தங்களது ஏஜெண்டுகளை நியமித்து உள்ளதாகவும், உலக அளவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் துவங்கி முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ்புஷ், கிளின்டன், ஒபாமா, தொழில் அதிபர்கள் பில்கேட்ஸ், பேஸ்புக் மார்க், ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் ஜேம்ஸ்கேமரூன், ஸ்டீபன் ஸ்டில்பெர்க், உலகின் மிகவும் பிரபலமான மேதைகள் காரல் மார்க்ஸ், ஐன்ஸ்டீன், டார்வின், உலக பிரபலங்கள் சர்ச்சில், ஹிட்லர், மைக்கேல் ஜாக்ஸன், இந்தியாவில் காந்தி, நேரு, துவங்கி கமல், ரஜினி வரை இலுமினாட்டிகள் ஏஜெண்டுகள் என கூறுகிறார்கள்.
மேற்கண்ட இலுமினாட்டிகள் என்ற கருத்து முழுக்க முழுக்க அறிவியல் ஆதாரம் அற்றது, உண்மைக்கு புறம்பானது. இதனை தமிழ் நாட்டில் சில படித்த நடுத்தர மக்கள் நம்ப துவங்கி உள்ளனர்.
உலகத்தை ஆட்டுவிப்பதாக கூறப்படும் பதிமூன்று உலக ஏகபோக முதலாளிகளும், உலக வர்த்தகம், அரசியல், உள்ளிட்டவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உன்மையே, ஆனால் இவர்கள் ஏன் இலுமினாட்டிகள் என்கிற பெயரில், ஒன்றுபட்ட வேண்டும் என்பதற்கான விடை தான் கேலிக்கூத்தானது.
இலுமினாட்டி என்ற கட்டுகதைக்கு பின்னால் பல நோக்கங்கள் உள்ளது, ஒன்று ஏகாதிபத்திய உலகமய சுரண்டலின் பயங்கரங்களை திசை திருப்புவது, இரண்டு வரலாற்றில் தொடரும் யூத மத எதிப்பை புதிய வடிவில் தொடர்வது, மூன்று கம்யூனிசம் உள்ளிட்ட அறிவியல் தத்துவங்களை மக்களிடம் சென்றடையாமல் தடுப்பது, நான்கு உலகமயமாக்கல் கொள்கையின் எதிர் விளைவாக சுரண்டபடும் உழைப்பாளி மக்களின் போராட்ட கூர்முனையை ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான தேசியம் சார்ந்த எதிப்பிலிருந்து, இலுமினாட்டி என முத்திரைகுத்தபடும் குழு மீது தனிநபர் எதிப்பாக திசை திருப்புவது.
இப்பொய்களை பெருபாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், மத அடிப்படைவாத அமைப்புகளே பரப்பி வருகின்றனர்.
இலுமினாட்டி என்ற கட்டுகதை இன்று நேற்றல்ல கடந்த 250 ஆண்டுகளாகவே பரப்பப்படுகின்றன, இதற்கான அடிப்படை காரணம்
ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற அமைப்பு இருந்தது,
18. நூற்றாண்டில் ஜெர்மன் ஆல்ப்ஸ் மலைபிரதேசம் பையரன் என்ற பகுதி , அன்றைய ஐரோப்பாவில் எந்த பகுதியிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை, மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், மத குருமார்களின் அதிகாரமும் மக்களை ஒடுக்கிய காலகட்டம், மன்னர்கள் மத குருமார்களுக்கு எதிராக பையரன் பகுதியில் 1776 ம் ஆண்டு ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt ) என்பவரால் இலுமினாட்டிகள் என்ற ஓர் அமைப்பு துவக்கப்பட்டது, ஆங்கிலத்தில் Enlightenment, ஒளி கொடுத்தல் என்ற அர்த்தத்தில் பிரஞ்சு மொழியில் இருந்து வந்த வார்த்தை.
மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துக்களை பரப்பிய இலுமினாட்டி அமைப்பை கண்டு, மன்னர்களும் மத குருமார்களும் அஞ்சினார்கள். அதன் எதிரொளியாக
இலுமினாட்டி அமைப்பை அன்றைய பையரன் நாட்டின் மன்னன் கார்ல்தியோடோர் தடை செய்ய உத்தரவிட்டான், அத்துடன் முடிந்தது இலுமினாட்டி அமைப்பின் வரலாறு.
இலுமினாட்டி அமைப்பு தடை செய்யப்பட்ட ஒரு சில வருடங்களில் பிரஞ்சு புரட்சி வெடித்தது,மன்னர்கள், நிலப்பிரபுக்களின் தலைகள் வெட்டப்பட்டன , மத குருமார்களின் அதிகாரம் சரிந்து, பிரஞ்சு புரட்சியை நடத்திய புரட்சியாளர்களின் கொள்கையும், பழைய இலுமினாட்டிகளின் கொள்கையும் ஒரே மாதிரி இருந்தது,
தடைக்கு பின்னரும் இலுமினாட்டிகள் ரகசியமாக செயல்பட்டதாகவும், அவர்களே பிரஞ்சு புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள், அவ்வாறுதான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ துவக்கியது.
இலுமினாட்டிகள் என்ற கட்டுகதை படிப்படியாக அதன் உள்ளடக்கம் யூத இன வெறுப்பு பிரச்சாரமாக வடிவம் எடுத்து,
அந்த காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் அடிக்கடி குறிப்பிட்டு பேசி வந்தார்
ரஷ்ய கம்யூனிஸ்ட்
(போல்ஷெவிக் ) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம், மேலும் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிறைவேற்ற அவர்களுக்கு வழிகாட்டும் தத்துவமாக மார்சியம் இருந்தது, இதை எழுதிய காரல் மார்க்ஸ் ஒரு யூதர் இதையெல்லாம் தொகுத்து ரஷ்ய புரட்சியை யூதர்களின் சதி என்றனர் .
யூத இன எதிர்ப்பு என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது, இன்று வரை ஐரோப்பாவில் மிகவும் மோசமான முறையில் தொடர்கிறது, முதலில் அது யூத -கிறிஸ்தவ நேரடி மோதலாக இருந்தது, மறு கட்டத்தில் இலுமினாட்டி என்ற கட்டுகதையுடன் இணைக்கப்பட்டது, இந்த கட்டுகதைகள் கிறிஸ்தவத்தை நம்பும் மக்கள் மனதில் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
கடவுள் -சாத்தான் என்கிற கருத்தியல்களில் கிறிஸ்தவர்கள் வெறுக்கும் லூசிஃபர் என்கிற சாத்தானை இலுமினாட்டிகள் வழிபடுவதாகவும், இந்த உலகத்தை சாத்தானின் ஆட்சியின் கீழ் கொண்டு வர இலுமினாட்டிகள் துடிப்பதாகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் கூறிவந்தனர், அத்துடன் முற்போக்கு புரட்சிகர அமைப்புகள் எல்லாம் சோசலிசம், ஜனநாயகம், என கூறி மதங்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி, இறுதியில் சாத்தானிய ஆட்சியை நிறுவும் நோக்கமே என்று அடிபடைவாதிகள் கூறி வந்தனர்.
யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள், நூறு வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட. சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை (The Protocols of the Elders of Zion ) என்ற நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது , தமிழில் இந்நூலுக்கு யூத பயங்கரவாதிகளின் அறிக்கை என்று தலைப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய ஜார் மன்னரின் விசுவாசியான செர்கெய் நீலுஸ் என்ற கிறிஸ்தவ மத பழைமைவாதி, இந்த நூலை வெளியிட்டார், இந்த நூல் ஏற்கனவே யூத மத அறிஞர்கள் மோசானிய விடுதி என்ற ஒரு ரகசிய சங்கத்தை நிறைவி அவர்கள் இந்த உலகை எப்படி எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என ரகசிய அறிக்கை எழுதி வைத்ததாகவும், அதை தனது நண்பன் மோசானிய விடுதியிலிருந்து திருடிகொண்டு வந்ததாக கூறி செர்கெய் நீலுஸ் இந்த நூலை வெளியிட்டார்.
ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது, பழமையான கருத்துக்களிலிருந்து, நவீன சிந்தனைக்கு மாறி கொண்டிருந்தது ,
அப்படியான வளர்ச்சியில் போது ரஷ்ய பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்து
தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது, அன்றைய ரஷ்யாவில் உரிமைகள் அற்ற ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை, அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி யூதர்களின் வளர்ச்சியை பிடிக்காமல் வெளியிட்ட நூல்தான்
சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை, இதை இவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ் தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்திலும், முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கண்ணோட்டத்திலும் எழுதி இருந்தார். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார், அன்றைய நிலபிரபுத்துவ கண்ணோட்டத்திலிருந்து, நவீன முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு, இதனால் நாஸிகளால் அதிகம் வாசிக்கபட்டது.
நூற்றாண்டுகளுக்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு கம்யூனிஸ யூத எதிப்பாக பரப்பப்படுகின்றன, ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்ததந்த காலகட்டத்தில் அவரவருடைய விருபத்திற்கேற்ப, அந்த நூலை திரிபுபடுத்தி வெளியிடுகிறார்கள், குறிப்பாக தமிழில் யூத பயங்கரவாதிகளின் அறிக்கை என்ற நூலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஊடக பயங்கரவாதம், கனிமவள கொள்ளை, ஊழல், ஆடம்பர அரசியல், போன்ற கேடுகளை இலுமினாட்டிகளே செய்ய போவதாக நூறு வருடத்திற்கு முன் சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை நூல் கூறுவதாக மொழி பெயர்ப்பாளர் எழுதி உள்ளார் ,
கடந்த பத்தாண்டுகளாக தமிழக அரசியல் சமுக களத்தில் முன்னுக்கு வந்துள்ள வந்துள்ள பிரச்சினைகளை அந்த நூல் எப்படி நூறு வருடத்திற்கு முன் பேசியது . இதிலிருந்து இந்த நூல் எவ்வளவு வடிகட்டிய பொய் பிரச்சாரம் என்பது அம்பலமாகிறது.
பாலஸ்தீன பிரச்சினை
''''''''"""""""""""""""::""""""""""""""""
பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது போல் யூதர்களின் புனிதத் தந்தை எனப்படும் ஏபிரஹாம் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்ததாகவும், ரோமானிய அரசர்கள் யூதர்களை அங்கிருந்து ஓட ஒட விரட்டினார்கள் என்றும், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிதான் எங்கள் தாயகம் என ஐரோப்பா முழுவதும் உள்ள யூதர்கள், தங்களுடைய தாய்நாட்டை ஏபிரஹாம் வாழ்ந்த பாலஸ்தீனத்தில் அமைப்பது என முடிவு செய்தனர்,
ஐரோப்பாவில் உள்ள யூதர்கள் ஒன்று சேர்ந்து ஜியோனிசம் என்ற அமைப்பை உருவாக்கினர்கள்
அன்றைய வரலாறு சூழ்நிலை ஜியோனிஸ்ட் களின் அடிப்படை வாத கருத்துக்களுக்கு ஏற்றவாறு அமைந்தது, காரணம் இரண்டாம் உலகபோரில் ஹிட்லரின் யூத படுகொலைகள் , உலகம் முழுவதும் உள்ள யூதர்களை நடுநடுங்க செய்தது.
அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்கிற சிந்தனையை உருவாக்கியது, அராஜகமான முறையில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன் , இன்று வரை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடர்கிறது .
1948 ல் இஸ்ரேல் நாடு உருவான நாள் முதலாக சொந்த பூமியை இழந்த பாலஸ்தீன இஸ்லாமியர்கள் இஸ்ரேலை எதிர்த்து
வீரமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர், மறுபுறத்தில் அது யூத இன வெறுப்பாக உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளால் முன்னெடுக்கபடுகிறது.
அதன் தொடர்ச்சிதான் பழைய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், கூறிவந்த யூத -இலுமினாட்டி என்கிற கட்டுகதையை மீண்டும் புதிய வடிவில் பரபரப்பி வருகிறார்கள்.
யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் நாட்டை சதியின் மூலமும் வன்முறையின் மூலமும் உருவாக்கினார்கள் என்பது உன்மையே, இஸ்ரேலை எதித்து போராட்டம் செய்வது நியாயம், ஆனால் உலகில் உள்ள யூதர்கள் அனைவரும் சதிகாரர்கள் என்றும் அவர்கள் அழிக்கபட வேண்டியவர்கள் என்று கூறுவது சரியல்ல ,
மேலும் யூதர்கள் தனி இனமாக சித்தரிக்கப்படுகின்றனர் ,யூதர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்ட, ஒரே சிந்தனை கொண்ட இனக்குழுவினர் என்பது ஒரு கற்பனையான வாதம். எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்திற்கு செல்ல விரும்பவில்லை. யூதர்கள் மத்தியிலும் பலதரப் பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
யூதர்களை தனியான இனமாகக் கருதுவது அறியாமை. எத்தியோப்பிய கருப்பின யூதர்களுக்கும், ஐரோப்பிய வெள்ளையின யூதர்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த ஒற்றுமையும் கிடையாது, எனவே இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்துடன் , யூத இன வெறுப்பு அரசியலை இணைப்பது நியாயமில்லை.
இந்தியாவிலும் இலுமினாட்டிகள் என்ற கட்டுகதையை இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளால் அதிகம் பரப்பப்படுகின்றன,
இலுமினாட்டி எதிர்பாளர்கள் பேச்சும் எழுத்தும் முதலில் பார்ப்பதற்கு முற்போக்கு உள்ளடக்கம் இருப்பது போல் தோன்றும், ஆனால் அவை முழுக்க முழுக்க பிற்போக்கு தன்மை வாய்ந்த கருத்து பிரசாரம் ஆகும், இதனை நவீன சமுக ஊடகங்கள் மூலம் சாதாரண மக்களை நம்ப வைக்கின்றனர்,சில படித்த நடுத்தர மக்களும் இளைஞர்களும் இதனை நம்ப துவங்கி உள்ளனர்.
முதலாளித்துவம் எனும் மக்கள் விரோத அமைப்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான், இலுமினாட்டி எனும் கட்டுக்கதைகளை நம்பி விடுகிறார்கள். “இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகள்” என்று அவர்கள் கூறுவன எல்லாம், பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் உலகமய தாராளமய கொள்கைகள் விளைவிக்கும் வழமையான அராஜகங்கள் தான்.
இந்த சிக்கலான முதலாளித்துவ சமுதாயத்தில், உச்சியில் இருக்கும் ஆளும் வர்க்கம் எவ்வாறு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி சொத்துக்களை குவித்து வருகின்றது என்ற உண்மை பலர் கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, இலுமினாட்டி கதைகளை நம்புவோரிடமும் முதலாளித்துவம் பற்றிய எந்த ஆய்வும் கிடையாது.
உலகில் நடக்கும் தீமைகளுக்கு எல்லாம், சில தனி நபர்களே காரணம் என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருக்கும் சில கருப்பாடுகளை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள்.
தற்போதுள்ள அரசு மற்றும் சமுக பொருளாதார கட்டமைப்பு முழுவதும் தவறானது என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது.
அதிமுகவுக்கு பதிலாக திமுகவை, காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள்.
அதே மாதிரி, இலுமினாட்டி சதிகாரர்களை இனங்கண்டு நீக்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக வரும் ஆட்சியாளர்கள், அந்தப் பதவியில் இருந்த முந்திய ஆட்சியாளர்களைப் போன்றே நடந்து கொள்வதை வரலாறு முழுவதும் கண்டு வந்துள்ளோம். முதலாளித்துவத்தை புரிந்து கொண்டு அதை தூக்கி எறிவதன் மூலம்தான் உலகின் தீமைகளிலிருந்து விடுபட முடியும் .
தோழமையுடன்
சி.ஆர். செந்தில்வேல்
செயற்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இராமேஸ்வரம்
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு 9940817745

அருமை தோழர்
பதிலளிநீக்குசிறப்பான பதிவு தோழர்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நிகழ்காலம் கடந்த கால வரலாற்றுப் பதிவு.... அருமை தோழர்.
பதிலளிநீக்குதோழர் வணக்கம் தங்களுடைய பதிவு அருமையாக இருந்தது இதேபோல் உலகில் நடந்த புரட்சிப் போராட்டங்கள் வர்க்கத்தின் அடிப்படையில் நடந்ததா அல்லது இன ஒற்றுமையின் நடந்ததா என்ற தலைப்பில் பதிவிடுங்கள் தோழர் நன்றி வணக்கம்
பதிலளிநீக்குஅடுத்த பதிவில் நிச்சயம் நீங்கள் குறிப்பிட்ட தலைப்பில் பதிவிடுகிறேன்
நீக்குநன்றி தோழரே
அருமையான விளக்கம் கொடுத்தார்.
நீக்குஇல்லுமிநாட்டி என்பது பற்றி தெளிவான பார்வையை தந்தது உங்கள் பதிவு. அருமை தோழரே.
பதிலளிநீக்குநன்றி தோழர் Sermuga Pandian
நீக்கு